×

மாசிமக தீர்த்தவாரிக்காக சாலைகள் விரிவாக்கம்

புதுச்சேரி,  ஜன. 3:  புதுவையில் மாசிமக தீர்த்தவாரிக்காக குருசுகுப்பத்தில் சாலை  விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அங்கு அமைக்கப்படும் பாலம் தை  மாதத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.புதுவை  வைத்திக்குப்பத்தில் வருடந்தோறும் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக  கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு  ஏற்பாடுகளை அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே  கடற்கரை சாலை பழைய வடிசாராய ஆலையில் இருந்து குருசுகுப்பம் ரோடு வழியாக  வைத்திக்குப்பம் செல்லும் வழியில் உள்ள மிக குறுகலான பாலத்தால்  தீர்த்தவாரியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் திணறி வந்தனர்.  இதையடுத்து அங்கு பெரிய பாலம் அமைப்பது சாலையை விரிவாக்கம் செய்வது  தொடர்பாக பொதுமக்கள் தொகுதி எம்எல்ஏ லட்சுமிநாராயணனிடம் முறையிட்டனர்.இதையடுத்து  இப்பிரச்னை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு  இப்பணிகள் ரூ.1.65 கோடி செலவில் தொடங்கப்பட்டது. தற்போது பெரிய பாலம்  கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் சில தினங்களில் அவை  முழுமையாக நிறைவடைய உள்ளது.

அதைத் தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள்  முடிக்கப்பட்டு தை மாதம் திறப்பு விழா காணும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மாசிமக தீர்த்தவாரி விழாவுக்கு முன்னதாகவே அதை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பினும்,  இதற்கான ஒப்பந்த (காண்ட்டிராக்ட்) நிறுவனத்துக்கு தொகை முழுமையாக  செலுத்தப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை  அரசு விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Tags : roads ,
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு